தமிழ் வழி ஐ.ஏ.எஸ் (IAS) எழுத பல சந்திக்க வேண்டும். சந்திக்க முடியுமா?
"நீ என்ன பெரிய கலெக்டரா?" இல்ல IAS ? இக்கேள்வியை எதிர்கொள்ளாத தமிழ் இளைஞர்கள் யாரும் இருக்க முடியாது. சிவப்புச்சுழல் விளக்கு, சமூக மதிப்பு இளம் வயதில் உயர்ந்த பொறுப்பு மக்கள் சேவைக்கான நேரடி வாய்ப்பு இவையனைத்தும் தான் பல இளைஞர்களை'கலெக்டர் கனவு' காண வைக்கின்றன. ஆனால் எங்கப்பாதான் என்னை இங்கிலீஷ் மீடியம் படிக்க வைக்கலயே நான் எப்படி ஐ.ஏ.எஸ். தேர்வெல்லாம் எழுதுறது என்ற பொதுப் பார்வையை உடைத்து, தீராத ஆர்வத்தாலும் ஓய்வில்லாத உழைப்பாலும் தாய்மொழித் தமிழில் தேர்வெழுதி இலக்கை எட்டியவர்கள் தமிழகத்தில் பலர். இந்திய துணைத் தலைமை தேர்தல் ஆணையர் ஆக இருந்த ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., கர்நாடகத்தில் வேலை செய்யும் திரு.ராஜேந்திர சோழன் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாட்டில் வேலை செய்யும் திரு.நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., கோவையில் சுங்கவரித் துறையில் வேலை செய்த திரு.கோபால் ஐ.ஏ .ஏஸ் திரு.மணிகண்டன் ஐ.ஏ.ஏஸ் எனத் தமிழில் எழுதி வென்றவர்களின் பட்டியல் நீளும். என்னது! தமிழ் வழியில் எழுதலாமா? இந்த ஐயம் நிறைய மாணவர்களுக்கும் போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கும் உள்ளது. யு.பி.எஸ்.ஸி நடத்தும் அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் எதில்வேண்டுமென்றாலும் எழுதலாம். முதன்மைத் தேர்வை மட்டுமல்ல. நேர்முகத் தேர்வையும் தமிழில் எதிர்கொள்ள முடியும். தேர்வை மட்டும் கூட தமிழில் எதிர்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. மொழி என்பது அறிவல்ல, ஆனாலும் அவசியம் .ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற உயர்பணிகளுக்காக நடத்தப்படும் இத்தேர்வின் மூலம் மிகச்சிறந்த படிப்பறிவும், ஆர்வமும், உழைக்கும் ஆற்றலும் கொண்ட இளைஞர்களைத்தான் தெரிவு செய்கிறார்களே தவிர, வர், ஆங்கில மொழிப்புலமை பெற்றவர்களை அல்ல. இந்த தேர்வை வடஇந்திய மாணவர்களில் பலர் இந்தியில் எழுதுகிறார்கள். அதேபோல் வட்டார மொழிகளில் எழுதி வெற்றி பெறுவோரும் பலர் உள்ளனர். ஆனால் குடிமைப் பணித்தேர்வில் வெற்றிபெற ஒரு பட்டதாரி இளைஞருக்குரிய ஆங்கில அறிவு அவசியம். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும். அதைப்புரிந்து கொள்வதற்கும், முதன்மைத்தேர்வில் ஆங்கில மொழியறிவைச் சோதிக்கும் கட்டாயத்தாளை (Compulsory Paper) எழுதி வெற்றி பெறுவதற்கும் ஆங்கில மொழியறிவு அவசியம். (ஆங்கில மொழித்தாள் மதிப்பெண்கள் இறுதி தரப்பட்டியலுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.) எனக்கு ஆங்கிலம் வராது, தமிழ் மொழியின் மீது பற்று அதிகம் போன்ற காரணங்களை வைத்தே தமிழ் வழியில் தேர்வெழுதி வெற்றி பெறலாம் எனக்கருதுவது கானல் நீர்தான். ஆங்கில மொழியில் எழுதுவதைவிட, தமிழில் எழுதினால் என்னுடைய கருத்துக்களை மிகச்சிறப்பாக வெளிப்படுத்த முடியும், ஆங்கில மூல நூல்களை படித்துப் புரிந்து கொண்டு தமிழில் மொழிபெயர்த்து எழுத இயலும் என்ற ஆற்றலும்தான் வெற்றி வாகை சூடுவதற்கான வாய்ப்பைத் தரும்.
ஐ.ஏ.எஸ். தமிழ் வழித்தேர்வுக்கு வரிசையில் நிற்கும் சவால்கள் :
1.முதனிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு ஆகியவற்றில் வினாக்காள் ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் இருக்கும். முதனிலைத் தேர்வில் கொள்குறி வகையிலும் (Objective type) முதன்மைக் தேர்வில் விரிவான விடையளிக்கும் வகையிலும் (Descriptive Type) இருக்கும். முதனிலைத்தேர்வில் குடிமைப்பணி திறனறித்தேர்வுத் (CSAT) தாளில் ஆங்கிலப்பத்திகளைப் புரிந்து கொண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் (Comprehensive Test) பகுதியை எதிர்கொள்ள நல்ல ஆங்கில அறிவு அவசியம் இந்தநிலையில் தான் ஆங்கில புரிதிறன் குறைந்த மாணவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். 2.முதன்மைத் தேர்வில் ஆங்கிலத்தில் வினாத்தாள் இருக்கும். ஆனால் விடைகளைத் தமிழில் எழுதலாம். அப்படி எழுதும் போது முக்கிய கலைச்சொற்களை அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் எழுதுவது அவசியம். எடுத்துக்காட்டாக ஆழிப்பேரலை (Tsunami) என்று எழுத வேண்டும். இது சற்று நேரத்தை எடுக்கும். 3.நேர் முகத்தேர்வில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் வினாக்களையும் நாம் தமிழில் கூறும் பதில்களையும் மொழிபெயர்த்துச் சொல்வதற்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் இருப்பார். கடந்த ஆண்டுகளில் தமிழில் நேர்முகத் தேர்வை எதிர்கொண்டவர்களை முடிதந்தவரை ஆங்கிலத்தில்தான் பேசச்சொல்லியிருக்கிறார்கள். இந்திய அளவில் உயர் பதவியை பெறத்துடிக்கும் இளைஞர்கள் முயற்சி செய்து ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.4.குடிமைபணித் தேர்வு இந்திய அளவில் போட்டியைக்கொண்ட தேர்வு என்பதால் இதற்கான சந்தையின் பொது மொழியாக ஆங்கிலமே இருக்கிறது. தலைசிறந்த பார்வை நூல்கள், வழிகாட்டி நூல்கள், இதழ்கள் மற்றும் இத்தேர்வை நுணுகி ஆய்வு செய்து பாடக்குறிப்புகள் (Study Materials) தயார் செய்யும் பயிற்சி மையங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே வெளியிடுகின்றன. தேர்வுக்கான முக்கியத்தரவுகள் ஆங்கிலத்தில் தான் கிடைக்கும். அதைப்படித்துப்புரிந்து கொண்டு மொழிபெயர்த்து எழுதுவது தான் தேர்வர்களுக்கான சவால்.
தொடர்ச்சி......