தமிழ் வழியில் வென்றவர்கள் சொல்வதென்ன?

5.கடந்த ஆண்டுகளில் தமிழ்வழியில் எழுதி வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட நண்பர்கள் கூறும்போது தமிழ் எழுத்துருக்கள் வட்டவடிவில் உள்ளதால் ஆங்கிலத்தில் எழுதும் வேகத்தைப்போல் தமிழில் வேகமாக எழுத இயலாததால் முழுமையாக விடையளிக்க முடியவில்லை என்றனர். மேலும் கல்லூரியில் ஆங்கிலத்திலேயே எழுதிப்பழகி, பள்ளிப் படிப்புக்குப்பிறகு நான்கைந்து ஆண்டுகள் தமிழில் எழுதும் தொடர்பே இல்லாமல் இருப்பதும் தமிழில் நன்கு தேர்வெழுது வதைச் சாத்தியப் படுத்துவதில்லை . 6. முழுமையாகத் தமிழில் பயிற்சி அளிப்பதற்கு பயிற்சி மையங்களே இல்லை. மேலும் தமிழில் திறமையாக எழுதும் மாணவர்களால் ஆங்கிலத்திலும் எழுத முடியும். எனவே ஆங்கில நூல்களைப் படித்து ஆங்கிலத்திலே எழுதி வருகிறார்கள் என்கின்றனர் சிலர். 7. பொது அறிவுத்தாள்கள் தவிர, ஒரு விருப்பப்பாடத்தைத் தெரிவு செய்து, முதன்மைத்தேர்வை எழுத வேண்டும். இதில் பொது நிர்வாகம், சமூகவியல், புவியியல் போன்ற பாடங்களுக்குத் தமிழில் பல்கலைக்கழகப்பாட நூல்களைத் தவிர ஐ.ஏ.எஸ். தேர்வுத் தரத்திற்கு வேறெந்த நூல்களும் இதுவரையில் இல்லை. இதுபோன்ற விருப்பப் பாடங்களை தமிழ் வழியில் எழுதபடும் உழைப்பு தேவைப்படுகிறது. 


தமிழ் வழியில் வென்றவர்கள் சொல்வதென்ன?


முதுகலைத் தமிழிலக்கியம் பயின்று, தினமணியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே, நத்தத்திற்கும் மதுரைக்கும் தினந்தோறும் பயணம் செய்யும் நேரத்தில் படித்து முதல் நாள் சென்னையில் தேர்வெழுதி விட்டு இரவுபயணித்து மதுரை சென்று அலுவலகப் பணிகளை முடித்து, மறுநாள் சென்னையில் தேர்வெழுதி, இப்படித்தனது கடின உழைப்பால் முதல் தமிழ்மொழி ஐ.ஏ.எஸ். என்ற மகுடம் தாங்கியுள்ள ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்களின் வெற்றிக்கதை உழைப்பின் பெருமையையும், தமிழின் வளத்தையும் உலகுக்குச் சொல்கிறது. தமிழில் தேர்வெழுது வதால் நமது கருத்துக்களை, நிலைப்பாட்டை முழுமையாக வெளிப்படுத்த வேண்டிய பொதுக்கட்டுரைத்தாளில் அதிக மதிப்பெண்கள் பெறவாய்ப்புள்ளது. ஆங்கிலத்தை விடவும், தமிழில் சிறப்பாக எழுதமுடியும் என்றால்தான் தமிழ் வழியில் எழுத வேண்டும் என்கிறார் திருநந்தகமார் ஐ.ஏ.எஸ். பொறியாளரான இவர் ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழ் வழியில் எழுதி வென்றவர்.


எதிர்கொள்வதும் வெல்வதும் எப்படி?


1) எனக்கு ஆங்கிலம் என்றாலே அலர்ஜி என்ற எண்ணத்தைத்தூக்கி எறிந்துவிட்டு, தொடர்ச்சியான வாசிப்பின் மூலமும் ஆர்வத்தின் மூலமும் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ்வழி மாணவர்கள் முதனிலைத் தேர்வில்கூட வெற்றிபெற இயலும். 2) தரமான தமிழ் நாளிதழ்களை, சஞ்சிகைகளை தொடர்ந்து வாசிக்கவேண்டும். 'தி இந்து', 'தினமணி' போன்ற நாளிதழ்களில் வரும் நடப்பு நிகழ்வுகள், அறிவியல் செய்திகள், பன்னாட்டு நிகழ்வுகள், சமூக, பொருளாதார, அரசியல் நடப்புகளைப்பற்றிய கட்டுரைகளை நன்கு வாசிக்க வேண்டும். 3) விக்கிபீடியா போன்ற தகவல் தளங்களில் தமிழில்நிறைய அறிவியல் மற்றும் செய்திக்கட்டுரைகள் கிடைக்கிறது. அதைப்பயன்படுத்திக் கொள்ள வேண் டும். 4) தமிழ் வழியில் எழுதும் மாணவர்கள் தமிழ் இலக்கி யத்தையே விருப்பப்பாடமாகத் தேர்வு செய்யலாம் (எந்தப் பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும்). மற்றப்பாடங்களை எடுக்க விரும்புவோர் பல்கலைக்கழகங்களின் முதுநிலை அளவிலான - பாடநூல்களைப் பெற்று யு.பி. எஸ்.ஸி. பாடத்திட்டத்திற்கு ஏற்ப  குறிப்புகள் தயாரிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். தேர்வை முதன் முதலாக தமிழில் எழுதி வெற்றிபெற்ற திரு.ஆர்.பாலகிருஷ்ணனில் தொடங்கி, ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுதியவர்கள் அனைவருமே தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப்பாடமாக எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுப்பதற்கு தமிழ் இலக்கியம்தான் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதால் தொழிற்கல்வி மாணவர்களும் தமிழ் ஆர்வம் இருந்தால் அவ்வாறு தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்து பயில்வது வெற்றியை எளிதாக்கும். 5) எந்த மொழியாக இருந்தாலும் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம்தான் திறமையாகவும் பிழையில்லாமலும் எழுதமுடியும். அதற்கு அவ்வப்போது மாதிரி விடைகளை எழுதி பயிற்சி பெறுவதன் மூலமே விரைவாகவும் பிழையின்றியும் எழுதமுடியும். 6) எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்கள், நண்பர்கள் என பெரும்பாலானோரிடம் இருக்கும் ஆங்கில வழியில் படித்தால்தான் அறிவு என்ற பொதுப்புத்தியை நம்பாமல் தமிழில் தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும்.


    அன்புடன்


கல்வியாளர் க. தண்டபாணி


செய்தி நிர்வாக ஆசிரியர்